தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியதிலிருந்து அ.தி.மு.க. கட்சிக்குள் அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்று இருந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றெடுத்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள் மாற்று அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் விஜய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக சிலர் அந்த அணிக்கு நெருக்கமாகச் செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், த.வெ.க.வில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் அ.தி.மு.க.வில் இருந்து சில எம்.எல்.ஏ.களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. அ.தி.மு.க. வில் சிலர் த.வெ.க. ஆதரவு நிலை எடுக்க முடிவு செய்தனர்.
இந்த தகவல்கள் பரவியதும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது. அந்த ஆலோசனையில், தொடர் தேர்தல் தோல்விகளுக்கான காரணங்கள், கூட்டணி அரசியலில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் தலைமையின் முடிவுகள் குறித்து கடுமையான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஒன்று கூடினர். அதில் சுமார் 37 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம் என்னவென்றால், அ.தி.மு.க.வின் சில முக்கிய முகங்கள் த.வெ.க.வுக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர் என்பதே. இது உண்மையாக மாறினால், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
