பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் : பல்வேறு பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகி உள்ளது.

இதில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக கணினி அறிவியல் பாடத்தில் அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 6,945 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியலில் 1,946 பேரும் முழு மதிப்பெண் பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் 683 மாணவர்கள், பொருளியலில் 440 பேர், கணிதத்தில் 732 பேர், உயிரியல் பாடத்தில் 784 மாணவர்கள் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழில் 83 பேரும் முழு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

அதேபோல், இயற்பியலில் 105 மாணவர்கள், வேதியியலில் 632 பேர், விலங்கியலில் 18 பேர், தாவரவியலில் 31 பேர், வரலாற்றில் 282 பேர், ஆங்கிலத்தில் 21 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 463 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

Related Post

Latest News