சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.
இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இரவு நேரத்தில் தொடங்கி அடுத்த நாள் இரவு வரை நீடித்ததால், இரண்டு நாட்களாக பக்தர்கள் திரளாக திருவண்ணாமலையை நோக்கி வந்தனர். மாலை நேரத்தில் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்களால் நிரம்பியது. இரவு நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது.
கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், மோர் மற்றும் அன்னதானம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், அனைவரும் பொதுத் தரிசனமாக ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.


