உத்தரப் பிரதேசத்தில் டிஜே சத்தத்தால் 140 கோழிகள் பயத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்றைய காலத்தில் திருமணம் முதல் பிறந்தநாள் வரை எந்த விழாவாக இருந்தாலும் டிஜே இசை இல்லாமல் நிகழ்ச்சியே முழுமையடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் இந்த சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கும் வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சம்பவம் நடந்துள்ளது.
அம்மாநிலத்தில், சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள தரியாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் டிஜே இசை ஒலிக்கப்பட்டது. இந்த ஊர்வலம் அருகில் இருந்த கோழிப் பண்ணையை கடந்து சென்றபோது, அந்த சத்தம் மற்றும் அதிர்வுகளை தாங்க முடியாமல் சுமார் 140 கோழிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், அதிக சத்தத்தால் ஏற்பட்ட பயமும் அதனால் ஏற்பட்ட மாரடைப்பும் கோழிகளின் உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பண்ணை உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, டிஜே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கவி யாதவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


