சென்னையில் போலீஸ் ரோந்து வாகனம் திருடி ஓட்டிய வாலிபர் விபத்து ஏற்படுத்தியுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபரை போலீசார் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை, பெரியமேடு காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் நேற்றுமுன் தினம் இரவு 8 மணியளவில், சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது நபர் ஒருவர், போலீஸ் ரோந்து வாகனத்தை எடுத்து கிளம்பியுள்ளார். கடத்தப்பட்ட போலீஸ் வாகனம் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகிலுள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாடகை காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து பிடித்தனர். விசாரணையில், அவர் லிஜோ ஜோசப் (30), கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் என்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்தபோது அவர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


