செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 முதல் 2023 வரை, செந்தில் பாலாஜி தமிழக மின்சார வாரியத்தில் அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டால் அரசுக்கு சுமார் ரூ.397 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக மின்சார வாரியம் (டான்ஜெட்கோ), தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


