இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்சக்தி (Solar) தொடர்பான பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிரடியாக 123.04% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளையும் சேர்த்தால், தற்போது இந்தியத் தயாரிப்புகள் மீது ஒட்டுமொத்தமாக 200%-க்கும் அதிகமான வரிச் சுமை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மிக குறைந்த விலையில் சூரியசக்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதால், அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி வரி உயர்வால் அமெரிக்காவிற்கு சூரியசக்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.


