வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்த திமுக நிர்வாகி கைது

கடலூரில் வாக்குச்சாவடியில் வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சாவடிக்குள் செல் போன் பயன்படுத்தக்கூடாது, வீடியோ பதிவு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர். விக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் (33), களத்துமேடு நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘பானை’ சின்னத்திற்கு வாக்களித்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரி உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

Latest News