வாக்குரிமைக்கு தடையா? – ஊதியத்துடன் விடுமுறை என்ற உத்தரவை மீறும் ஐ.டி நிறுவனங்கள்.!

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கச் செய்வதற்காக, தேர்தல் நாளில் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இந்த உத்தரவு, அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சமமாக பொருந்தும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அந்த நாளில் முழுமையான ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த 12 ஆவணங்கள் போதும்

ஆனால், சில ஐ.டி நிறுவனங்களில் இந்த உத்தரவு நடைமுறையில் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், “நேரடி விடுமுறை வழங்காமல், ‘Work From Home’ முறையில் பணியாற்றிக்கொண்டே, மேலாளர்களின் அனுமதியுடன் வாக்களிக்கச் செல்லலாம்” என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் உண்மையான நோக்கத்திற்கே முரணானதா என்ற கேள்வியை எழுப்புகிறது. வாக்காளர்களுக்கு தடையில்லா சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தபோதிலும், சில நிறுவனங்களின் நடைமுறை அந்த உரிமையை குறைக்கும் வகையில் உள்ளதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

இதனிடையே, தனியார் துறையில் தேர்தல் உத்தரவுகள் எவ்வளவு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதில் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest News