ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கஞ்சா போதையின் உச்சத்தில் 60 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர், நேற்று நள்ளிரவில் தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 23) என்ற வாலிபர், கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டில் புகுந்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த அந்த வாலிபர், கஞ்சா போதையின் உச்சத்தில் மூதாட்டி என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி பயத்தில் அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் மூதாட்டியின் வாயில் துணியை வைத்து பலமாக அமுக்கியுள்ளார். சத்தம் போட முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை, வாலிபர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், விடிவதற்குள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மூதாட்டியின் புகாரைப் பெற்றுக் கொண்ட ஆற்காடு போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
தலைமறைவாகி தப்பியோட முயன்ற குற்றவாளி தட்சிணாமூர்த்தியை போலீசார் தீவிரமாகத் தேடி, சில மணி நேரங்களிலேயே மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
