மும்பையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட காலை உணவுக்கான கட்டணப் பட்டியலைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அவர் ஆர்டர் செய்த சாதாரண உணவுகளான ஆலு பராத்தா, 3 அவித்த முட்டைகள், ஒரு கிண்ணம் தயிர் மற்றும் வெண்ணிலா மில்க்ஷேக் ஆகியவற்றிற்கு ரூ. 2,300 பில் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, 3 முட்டைகளுக்கு மட்டுமே வரிகளுடன் சேர்த்து சுமார் ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதுதான் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணம்.
அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : “நான் ஒன்றும் ஆடம்பரமான உணவை ஆர்டர் செய்யவில்லை. சாதாரண பராத்தா, முட்டை, தயிர் மற்றும் மில்க்ஷேக் மட்டும்தான். ஆனால் பில் தொகையைப் பாருங்கள், ரூ. 2,300 வந்துள்ளது. இதில் 3 முட்டைகளின் விலை மட்டும் ரூ. 499 வந்துள்ளது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்காகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஒரு சாதாரண முட்டையின் சந்தை விலை ரூ.10 முதல் ரூ.12 வரைதான் இருக்கும். அதற்கு 4 அல்லது 5 மடங்கு கூடுதலாக விலை வைக்கலாம். ஆனால், இங்கு ஒரு முட்டையின் விலை ரூ. 160 முதல் ரூ. 170 வரை கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகவும் அநியாயமானது, என்னால் இதை நம்பவே முடியவில்லை!” என கூறியுள்ளார்.
இந்த கட்டணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுவது இது முதல் முறையல்ல என்றாலும், இந்த முட்டை விவகாரம் தற்போது மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
