கொரோனாவால் ஆந்திராவில் ஒருவர் உயிரிழப்பு : மீண்டும் பரவுகிறதா கொரோனா?

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் 46 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் பதிவான கொரோனா உயிரிழப்பாக இது கருதப்படுவதால், மாநில அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடப்பா மாவட்டத்தின் மசாபேட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் தொடர் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் முதற்கட்டமாக தீவிர ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளித்த போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் இரு நுரையீரல்களிலும் கடுமையான பாதிப்பு மற்றும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவரது வசிப்பிடப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டது. மேலும், அவருடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவையான இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் அரசின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News