அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலையத்திலேயே தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரே இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் மோனு (வயது 22) என்ற இளைஞர் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்த காவல் நிலையத்தில் பயிற்சிப் பணியாளராக சேர்ந்தார்.
அவருக்குக் காவல் நிலையத்தின் கணினி பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் பிற தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. கணினிப் பிரிவில் பணிபுரிந்ததால், காவல் நிலையத்தின் அத்தியாவசியத் தரவுகள் மற்றும் ரகசிய அறைகளின் விவரங்கள் அவருக்குத் தெரியவந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பப் பணியைப் பயன்படுத்தி, காவல் நிலையத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் முக்கிய ஆயுதக் கிடங்கு அறைக்குச் செல்லும் வாய்ப்பை மோனு தந்திரமாகப் பெற்றுள்ளார்.
தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திய மோனு, ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 33 துப்பாக்கிகளைச் சிறுகச் சிறுகத் திருடியுள்ளார். கடந்த மாதம் காவல் நிலைய உயர் அதிகாரிகள், தங்களின் வழக்கமான ஆயுதக் கிடங்கு தணிக்கையை மேற்கொண்டபோதுதான் இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர மற்றும் ரகசிய விசாரணையில், தொழில்நுட்ப உதவியாளர் மோனுதான் இந்த திருட்டுக்குக் காரணம் என்பது உறுதியானது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், திருடப்பட்ட துப்பாக்கிகளை அவர் அரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சமூக விரோத கும்பல்களிடமும், தனிநபர்களிடமும் சட்டவிரோதமாக விற்பனை செய்தது அம்பலமானது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு விரைந்த அரியானா குற்றப்பிரிவு போலீசார், விற்கப்பட்ட 32 துப்பாக்கிகளை வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஆயுத விற்பனையில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரியானா மாநில காவல் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
