திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு 1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாட்டா ஏசி வாகனம் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், அந்த வாகனத்தில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி ஆந்திரா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி, சித்திக் பாஷா, முகமது அலி ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


