ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 9 பேர் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமை தொழிலாளர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 4 குழந்தைகள் உட்பட 9 பேரை மீட்டுள்ளனர்.

சின்ன கண்ணன் என்பவருக்கு சொந்தமான இந்த செங்கல் சூளையில், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெ. நாகலட்சுமி (விஜயராணி) உத்தரவின் பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஆ. தணிகஜலம் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையில், அங்கு பணியாற்றி வந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமை முறையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொத்தடிமையாக வைத்திருந்ததாக கூறப்படும் செங்கல் சூளை உரிமையாளர் சின்ன கண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

Related Post

Latest News