தமிழகத்தில் அடுத்தடுத்து முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்து வருவது காவல்துறை வட்டாரங்களில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால், தற்போது தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் 2023 ஆம் ஆண்டு தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்தது.
டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே தீயணைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்த பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். அந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், சீருடை பணியாளர் தேர்வாணைய வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட இருந்த ஓய்வுபெற்ற டிஜிபி சுனில் குமாரும் தனது பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்துள்ளார். மேலும், தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற டிஜிபி அபய் குமார் சிங் என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து நியமன பதவிகளிலிருந்து அதிகாரிகள் ராஜினாமா செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
