திருச்செந்தூர் – சென்னை இடையே தினசரி இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயிலில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ், இனி 23 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு அதிக இருக்கை வசதி கிடைப்பதுடன், முன்பதிவு சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியதாக இணைக்கப்பட உள்ள 5 பெட்டிகளில் ஒரு 2-அடுக்கு குளிர்சாதன பெட்டி, இரண்டு 3-அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இடம்பெறுகின்றன.
இதனால், தினமும் 350-க்கும் மேற்பட்ட கூடுதல் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். குறிப்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அறிவிப்பு பெரும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
