திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் வஃக்பு சொத்துகள் அபகரிப்பு? ஆதாரங்களுடன் மீண்டும் கலெக்டரிடம் புகார்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல மசூதிகளுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான வஃக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவரும், மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான வாஜித் (43), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த மனுவை வழங்கினார்.

அவர் அளித்த மனுவில், திருப்பத்தூரில் உள்ள பல மசூதிகளுக்கு சொந்தமான வஃக்பு சொத்துக்கள் ஏழை மற்றும் எளிய மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலையில், சில முத்தவல்லிகள் தங்களது உறவினர்கள் மற்றும் அறிமுகமான நபர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இதுகுறித்து 2025 ஆம் ஆண்டு முதல் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை உரிய விசாரணை அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வஃக்பு சொத்துக்களை அபகரித்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தொடர்புடைய விவரங்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் மனு அளித்துள்ளதாக வாஜித் தெரிவித்துள்ளார்.

Related Post

Latest News