தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைச் செயல்பாடு அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும் இதேபோன்ற வானிலை நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
