கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.
தனது பதவிக் காலத்திற்குப் பிறகு கட்சியில் தகுந்த அங்கீகாரம் கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அவருடைய டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது, அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க தலைமை முன்வந்தபோதிலும், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
கட்சியில் இருந்து விலகிய பின், அண்ணாமலை உடனடியாகப் புதிய அரசியல் கட்சியைத் தொடங்காமல், முதலில் ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
