கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சென்ற நிலையில், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியிருந்தார். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கரூரை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே மாணவி தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி, காதலனுடன் செல்ல முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினார். மேலும், “என்னை யாரும் தேட வேண்டாம்” என கடிதம் எழுதி வைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளை காணாமல் தவித்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். மாணவியின் செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாணவி காதலனை பார்க்க பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சென்றபோது அந்த பேருந்து திடீரென பழுதாகி நின்றது. அந்த நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்ட மாணவி, காதலனை சந்திக்காமல் மீண்டும் கோவைக்கு திரும்பியுள்ளார்.
மாணவியின் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்த போலீசார், அவரை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மாணவிக்கு போலீசார் அறிவுரை வழங்கி, பெற்றோருடன் சேர்த்தனர்.
