பாமக நிறுவனர் ராமதாஸ் மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு செல்லாது என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்புக்கு என்பது உறுதியாகியுள்ளது.
