மதுரை, ஆகஸ்ட் 05:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் ஜூலை 27-ம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. மேற்கொள்ள வேண்டும் என்பதை கோரியுள்ளார்.
இதில், வழக்கு மதுரை நீதிபதிகளுக்கு கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதோடு அதோடு ஆணவக் கொலைகளை தடுக்கும் சிறப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் என்றும் மனுதாரர் வாதிட்டார்.
இவரின் மனு தொடர்பான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வில் நடந்தது. அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, வழக்கின் தற்போதைய நிலவரத்தை விளக்கினார்.
சிபிசிஐடி விசாரணையில் 3 கைப்பேசி, 7 சிசிடிவி காணொளிகள் பறிமுதல் செய்யப்பட்டு சுர்ஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது விசாரணைக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், இதில் அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை முறையாக நடைபெறுவதால், மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை. சிபிசிஐடி-யின் விசாரணை குறித்து எந்த புகாரும் இல்லை என்பதால், மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்க கூடாது. ஆகவே சிபிசிஐடி, விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.