சென்னை, ஜுலை 5:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. மேலும், இந்த கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்றும், இது மெகா கூட்டணி ஆகும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்ற முழக்கத்துடன், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அவர் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்தவகையில் வரும் 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, 23-ந்தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவடையும் இந்த பயணத்தில், எடப்பாடி பழனிசாமி 33 சட்டசபை தொகுதிகளை சுற்றி மக்களை நேரில் சந்திக்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது பிரதமருக்கு அடுத்தபடியாக வழங்கப்படும் உயர்நிலை பாதுகாப்பு ஆகும். இதில் 12 கமாண்டோ படை வீரர்கள் மற்றும் 52 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.