டெல்லி, டிசம்பர் 01:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறுகிறது. இதில் 14 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் எஸ்ஐஆா் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி) பணியை வாபஸ் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், குளிர்காலக் கூட்டத்தின் பிற்பகல் அமர்வு எஸ்ஐஆா் விவாதத்துடன் தொடங்க வேண்டும்; இல்லையெனில் இடையூறுகளுக்கு அரசே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் மத்திய அரசிடம் அறிவுறுத்தின.
இந்த கூட்டத்தொடருக்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, மக்கள் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்; அமளியை வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; அவைகளுக்குள் அமளி செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார்.
14 மசோதாக்கள்: அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா -2025 (காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிவகுக்கும் மசோதா), தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா, பெருநிறுவன சட்டத் திருத்த மசோதா, பரிவா்த்தனை சந்தைக் குறியீடு சட்ட (எஸ்எம்சி) மசோதா-2025, மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா-2025 (கேடு விளைவிக்கும் பொருள்களுக்கு கலால் வரி விதிக்கும் மசோதா), சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு கூடுதல் வரி மசோதா-2025, ஜன் விஸ்வாஸ் (பிரிவுகள் திருத்தம்) மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.