சென்னை, பிப்ரவரி 21:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக, இன்று சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறைக்கு சென்று பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் சட்டசபையில் பேசினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தனது ஆதரவு எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசியது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி இன்று சிறப்பாக நிறைவு பெற்றதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதை அய்யப்பன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுகால நிலை, திமுக அரசு தமிழகத்திற்கு செய்துள்ள சாதனைகள் மக்களின் மனதில் ஆழமாக பதித்துள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கே வழி பிறந்துள்ளது. எனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பொறுமையாக இருந்து பாருங்கள் என்றார்.