சென்னை, பிப்ரவரி 04:
சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று அமளியின்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கையை நோக்கி வீசியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம். பி. சு.வெங்கடேசன் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில், காங்கிரஸ் எம்.பி.க்களான குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமார் ரெட்டி, அமரீந்தர் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகியோர் மீதும் இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப். 2 ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.