ரயில் டிக்கெட்டின் ஓரங்களில் சிறிய துளைகள் இருப்பது ஏன்? – பலருக்கும் தெரியாத ரகசியம்!

இன்றைய காலத்தில் ரயில் டிக்கெட்டை மொபைல் போனிலேயே எளிதாக பெற்றுக்கொள்ள முடிகிறது. QR குறியீடு கொண்ட இ -டிக்கெட்டை காட்டி பயணிக்கும் வசதியும் உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் பயணத்துக்கு கவுன்டரில் வழங்கப்படும் காகித டிக்கெட்டுகளே முக்கியமானதாக இருந்தன. அந்த பழைய ரயில் டிக்கெட்டின் ஓரங்களில் சிறிய துளைகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த துளைகள் ஏன் உள்ளது? பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

அந்த காலகட்டத்தில் ரயில்வே கவுன்டர்களில் டிக்கெட்டுகளை அச்சிடுவதற்கு இன்றைய நவீன பிரிண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை. தொடர்ச்சியான காகிதத்தை வேகமாகவும் துல்லியமாகவும் நகர்த்தும் வகையில் இயங்கிய அச்சுப்பொறிகள் பயன்படுத்தப்பட்டன.

அந்த இயந்திரங்களுடன் இந்த சிறிய துளைகள் முக்கிய பங்கு வகித்தன. பழைய காலத்தில் டிக்கெட் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர் தொழில்நுட்பமும் இருந்தது. காகிதத்தை சரியான வேகத்திலும் சரியான நிலையில் நகர்த்துவதற்கு பிரிண்டரில் உள்ள சிறிய பற்கள் கொண்ட சக்கரங்கள் உதவின.

ரயில் எண், பயண தேதி, புறப்படும் மற்றும் சேரும் நிலையங்கள், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் சரியான இடத்தில் அச்சிடப்பட வேண்டும். அச்சிடும்போது காகிதம் சற்று நழுவினாலும் எழுத்துகள் தவறான இடத்தில் அச்சாகலாம். இதனைத் தவிர்ப்பதற்காகவே துளைகளும் அவற்றுடன் இணைந்து செயல்படும் பற்சக்கர அமைப்பும் பயன்படுத்தப்பட்டன.

இப்போது ஏன் அந்த துளைகள் இல்லை?

கவுன்டர் டிக்கெட்டுகளில் இருந்து ஆன்லைன் முன்பதிவு மற்றும் மொபைல் இ-டிக்கெட் என ரயில் பயணச்சீட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு பயணி தனது செல்போனிலேயே டிக்கெட்டை பெற்றுக்கொண்டு பயணம் செய்ய முடிகிறது. இதனால் பழைய காகித டிக்கெட்டுகளில் காணப்பட்ட அந்த சிறிய துளைகள் தற்போது பலருக்கும் ஒரு பழைய நினைவாக மட்டுமே மாறிவிட்டன.

Related Post

Latest News