“கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” – இலங்கை அமைச்சர்

“We will never give up Katchatheevu to India” – Sri Lankan Minister

சென்னை, ஆகஸ்ட் 28

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசுகையில் அக்கட்சியின் தலைவர் விஜய், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். இதற்கான நிரந்தர தீர்வாக மத்திய அரசு கச்சத்தீவை மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

விஜயின் இந்தக் குறிப்பு அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் பெரிய விவாதத்துக்கு உள்ளான நிலையில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் விஜித ஹேரத், கொழும்புவில் நிருபர்களிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

அவர் கூறியதாவது: “முதலில், கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு. அது ஒருபோதும் மாறப்போவதில்லை. இப்போது தென்னிந்தியாவில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வாக்குறுதி பெற பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. அதில் கச்சத்தீவு விவகாரமும் ஒன்று. இது முதல்முறை அல்ல; பலமுறை இதுபோன்ற அரசியல் பேச்சுகள் நடந்துள்ளன. ஆனால் தேர்தல் மேடைகளில் பேசுவதால் கச்சத்தீவின் நிலை மாறாது.”

மேலும் அவர் கூறியதாவது, “ விஜய் தேர்தல் மேடையில் கச்சத்தீவைப் பற்றி பேசியதை பார்த்தேன். ஆனால் அதை பெரிதுபடுத்த தேவையில்லை. இலங்கை அரசினால் எந்த வகையிலும் ராஜதந்திர மாற்றம் நடைபெறவில்லை. இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்தக் காரணத்திற்காகவும் இந்தியாவுக்கு அதை வழங்க மாட்டோம். இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பேச்சு ஏதேனும் வந்தால் அதைக் கவனிப்போம். ஆனால் தேர்தல் மேடைகளில் வரும் கருத்துகளை பொருட்படுத்த முடியாது.” என்றார்.

இதன் மூலம், விஜயின் கருத்துக்கு இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் நேரடி மறுப்பு அளித்ததோடு, கச்சத்தீவு தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்