ஊரக வேலைத் திட்டத்தை 150 நாளாக உறுதிப்படுத்துவோம்: ஈபிஎஸ்

We will ensure rural employment scheme provides 150 days : EPS

செங்கல்பட்டு, டிசம்பர் 29:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் லட்சியம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட தையூர் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தவறான தகவலை கூறி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு 125 நாள்களாக உயர்த்தியுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்; ஊதியம் உயர்த்தப்பட்டு தடையில்லாமல் பணிகள் வழங்கப்படும். கரோனா தொற்று நேரத்தில் மக்களைப் பாதுகாக்க முயற்சி எடுத்த அரசு அதிமுக.

அந்தக் காலகட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,500 தந்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5,000 கொடுங்கள் என்று கூறினார்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000ஐ திமுக அரசு வழங்க வேண்டும்.

இனி திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. டாஸ்மாக், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடுகள் குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்ட ரீதியாக விசாரணை செய்யப்படும்.

அதிமுக ஆட்சியில் 52.50 லட்சம் பேருக்கு மடிக்கணிணி கொடுத்தோம். இதற்காக ரூ.7,350 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு மடிக்கணிணித் திட்டம் நிறுத்தப்பட்டது.

இப்போது தேர்தல் வருவதால் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணி கொடுப்பதாக திமுக அறிவித்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்த பிறகு நிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மடிக்கணிணித் திட்டம் , தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் தொடரும் என்றார்.

இந்த பிரசாரத்தில் மாவட்டச் செயலர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் கே.எஸ்.சீனுவாசன், எம்.பி. ம.தனபால், முன்னாள் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன், மாவட்ட துணைச் செயலர்கள் மாமல்லபுரம் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், எம்ஜிஆர் மன்றச் செயலர் வி.வேலாயுதம், அம்மா பேரவை செயலர் ஆனூர் வி. பக்தவத்சலம், ஒன்றியச் செயலர்கள் தையூர் எஸ் குமரவேல், குட்டி என்கிற நந்தகுமார், மாமல்லபுரம் ஜி.ராகவன், மாமல்லபுரம் நகர்மன்றத் தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை