திண்டிவனம், செப்டம்பர் 17 :
வன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் போராட்டத்தில் உயிர்நித்த 21 தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒருங்கிணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான கருத்து மோதலால், இரு அணிகளாக பிரிந்து உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.
தற்போது தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 வீரர்களின் உருவப்படங்களுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். மேலும் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் அவரது சிலைக்குத் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அது தவிர காரல் மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கு பாதுகாப்பாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா. அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு சட்டப்படி 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கண்டிப்பாக வழங்குவோம் என்றும், உயிர்நீத்த தியாகிகளின் தியாகம் வீணல்லாது பலர் இதனால் பயன் பெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இத்துடன், டாக்டர் ராமதாஸ், சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம், கோலியனூர் பகுதிகளில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோரின் நினைவு தூண்களுக்கு அஞ்சல்கள் செலுத்தி மரியாதை செலுத்தினார்.