செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

Water release from Chembarambakkam Lake increases due to heavy rain warning

சென்னை, அக்டோபர் 22:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதால் ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.

மழை காரணமாக ஏரிகளுக்குச் செல்லும் நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலில் வினாடிக்கு 100 கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை அதிகரித்ததைத் தொடர்ந்து திறப்பு அளவு 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றம் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு பெய்த மழை மற்றும் நதிநீர் வரத்து அதிகரித்துள்ளதால், இங்கு இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், மழை தீவிரம் காரணமாக படிப்படியாக நீர் வெளியேற்றம் இரட்டிப்பு அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்று கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிப்பில், ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தேவைப்பட்டால் மேலும் நீர் திறப்பு அளவு உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!