சென்னை, நவம்பர் 07:
உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவதாகவும், உடல் உறுப்பு கொடையாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் “தியாகச் சுவர்” உருவாக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கொடையாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட தியாகச் சுவர் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டது. இதை வியாழக்கிழமை (நவம்பர் 6) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியம், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வதற்கு முன்பே தாமே செய்து காட்டும் மனிதநேயத் தலைவராக உயர்ந்தவர். 2009 ஆம் ஆண்டிலேயே அவர் தனது உடலை தானமாக வழங்குவதற்கான உறுதியை எடுத்தார். அந்த வரலாற்று நிகழ்வு இன்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்ததாகும்,” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலின், 2009 ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வாழ்நாள் இறுதியில் உடல் தானம் செய்ய உறுதிமொழி அளித்தனர். அந்த மனிதநேயச் செயல் அப்போது சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பாராட்டைப் பெற்றது.
அந்த விழாவில் உரையாற்றியிருந்த ஸ்டாலின், உடலுறுப்பு தானத்தின் வரலாறு பண்டைய காலத்திலிருந்தே புனித முயற்சியாக இருந்து வந்தது என்பதை குறிப்பிட்டு, இன்று அறிவியல் முன்னேற்றத்தால் ஒருவர் தந்த தானம் மற்றவருக்கு உயிர் கொடுக்கும் அற்புதமாய் மாறியுள்ளதாக கூறியிருந்தார்.
மா. சுப்பிரமணியம் மேலும் கூறியதாவது, “2008 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற இளைஞர் சாலை விபத்தில் மூளைச் சாவுக்கு உள்ளாகியபோது, அவரது இதயம் பெங்களூருவில் உள்ள சிறுமிக்கு மாற்று அறுவை சிகிச்சையால் பொருத்தப்பட்டது. அந்த தியாகத்தை அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்று பாராட்டியதுடன், அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சுதந்திர தின விழாவில் விருதளித்து கௌரவித்தார்,” என்றார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின் படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் திருவுடலுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படுகிறது. 2023 செப்டம்பர் 23 முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 253 பேர் உடல் தானம் செய்துள்ளனர். மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்களோ அல்லது வருவாய் அலுவலர்களோ அரசு சார்பில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 23,189 பேர் உடல் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். முத்தமிழறிஞர் கலைஞரின் காலத்திலிருந்து தொடங்கிய இந்த முயற்சிக்கு மத்திய அரசின் விருதுகள் ஆண்டுதோறும் கிடைத்து வருகின்றன.
இத்திட்டத்தை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தானம் செய்தவர்களின் தியாகத்தை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு முழுவதும் “தியாகச் சுவர்” உருவாக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.