டெல்லி, ஆகஸ்ட் 20:
நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைய இருந்தது. இதனால், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையம் மூலம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு நான்கு தொகுப்புகளில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 20 முன்மொழிபவர்கள் மற்றும் 20 வழிமொழிபவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெபி நட்டா, நிதின் கட்கரி உள்ளிட்டோர், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள், எம்பிக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தல் சட்டப் பிரிவு 68(2)ன் படி, துணை ஜனாதிபதி பதவி காலியாகும் போது, கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி நடைபெறும் இந்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணனின் வேட்புமனுவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு தெரிவித்தனர்.