மதுரை, ஆகஸ்ட் 20:
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரப்பத்தியில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் அருகிலிருக்கும் நிலையில், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாரப்பத்தி நோக்கி திரண்டுள்ளனர். மாநாட்டு திடல் 506 ஏக்கரில் அமைக்கப்பெற்று, 200 ஏக்கரில் மேடை, நடைமேடை, தொண்டர்கள் அமர்வுக்கான ஏற்பாடுகள், 306 ஏக்கரில் வாகன நிறுத்த வசதி, 200-க்கும் மேற்பட்ட மின் கோபுர விளக்குகள், குடிநீர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் விஜய் நேரில் வந்து தொண்டர்களை சந்திக்கும் வகையில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. காலை முதலே மதுரை பாரப்பத்தி நோக்கி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டமாகப் புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது மகனுக்கு எழுதிய வாழ்த்துச் செய்தியில், “வெற்றியடையும் வரை உனது பக்கத்தில் நாம் இருப்போம், வரவிருக்கும் தேர்தல் உன் வெற்றியை உறுதி செய்யும். ‘நீ அரியணை ஏறும் நாள் வரும்’ – அது உன் தொண்டர்களின் திருநாள் என்பதை நினைவில் வைத்துக்கொள். நேர்மையான தலைவன் என்பதற்கு நீதானே எடுத்துக்காட்டு; உன்னுடன் நிற்கும் இந்த தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.