விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ரூ.10,000 டெபாசிட் தொகையையும் செலுத்தி, தேவையான உறுதிமொழியையும் வழங்கினார். அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளராக கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின், விஜய் மரக்கடை பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில், தனது மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், இரண்டு வழக்குகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் நடந்த பிரசாரத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கும், 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற மாநாட்டைச் சேர்ந்த மற்றொரு வழக்கும் அடங்கும்.
ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் நான்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். தற்போது, விஜய் பெரம்பூரில் இரண்டு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள இரண்டு மனுக்களில் சரியான தகவல்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தால், இந்த பிழையை சரிசெய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

