புதுடெல்லி, ஜூலை 22:
இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ காரணங்களை முன்வைத்து திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது பதவிக் காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிசபைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட ஜெகதீப் தன்கர், ஆகஸ்ட் 2022-ல் பதவியேற்று, 2027-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்துள்ளார். அவரது திடீர் முடிவால் பாஜக மட்டுமன்றி எதிர்க்கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில எதிர்க்கட்சிகள், அரசியல் காரணங்களால் அவர் விலக வைக்கப்பட்டாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், அவர் மருத்துவ காரணத்தாலேயே விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, புதிய துணை ஜனாதிபதி யார் என்பது குறித்து ஆர்வம் கிளம்பியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால்,விரைவில் புதிய ஒருவரை அறிவிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த பதவிக்கு, தற்போது மாநிலங்களவையின் துணை தலைவர் மற்றும் ஜேடியு உறுப்பினரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. 2020 முதல் மாநிலங்களவையின் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் அரசு தரப்பின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் என்பதால், அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு அவரை தேர்வு செய்யும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.