சென்னை, ஆகஸ்ட் 13:
சுதந்திர நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு பாரம்பரியமாக வழங்கும் தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) புறக்கணிக்க இருப்பதாக அதன் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கும் மக்களவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்ட நிலையில், ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை, “நாங்கள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம்” என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, விசிகவும் அதே முடிவை எடுத்துள்ளது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “வழக்கம்போல் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக நன்றி தெரிவிக்கிறோம். ஆனால், வழக்கம்போலவே, விசிக அவ்விழாவில் பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.