டெல்லி, நவம்பர் 07:
வங்காளக் கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய தேசியப் பாடல் ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகள் நிறைவு பெறும் வரலாற்று நாளை முன்னிட்டு, புதுடெல்லியில் தேசிய அளவிலான விழாக்கள் தொடங்கப்பட்டன.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய இந்தப் பாடல் முதன்முதலில் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி ‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியானது. இதனையொட்டி, இதன் 150 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஒரு ஆண்டு காலம் நடைபெறும் தேசியப் பாடல் கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், ‘வந்தே மாதரம்’ பாடலை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ பாடல் தேசிய ஒற்றுமைக்கான பிரகடனமாக விளங்குவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:
“பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சன்யாசி கலகத்தின் பின்னணியில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் அழியாத வரலாற்றை பெற்றது. 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கத் தாக்கங்கள் பெருகிய காலத்தில், இந்த பாடல் மக்களுக்கு உற்சாகமும் ஊக்கமுமாக மாறியது.
பாரத அன்னையை புகழ்ந்து பாடும் இந்தப் பாடல், மக்களின் உணர்வையும், நாட்டின் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. அது எவ்வாறோ அன்றைய காலத்தில் மக்களைத் தூண்டி முன்னேற்றியதோ, அதுபோலவே என்றும் தேசிய உணர்வின் அடையாளமாக நிலைத்திருக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, இதனை தேசியப் பாடலாக ஏற்றது நமது நாட்டின் பெருமையாகும். இந்த 150 ஆவது ஆண்டு நிறைவு தருணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் இந்தப் பாடலின் உண்மையான அர்த்தத்தின்படி இந்தியாவை வளமான மற்றும் மகிழ்ச்சியான தேசமாக மாற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். வந்தே மாதரம்!” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.