சென்னை, ஜூலை 18:
தளபதி விஜய் தலைமை வகிக்கும் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. புதிய செயலியின் மூலம், வாக்காளர் பட்டியலுடன் கூடிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் முறையில் செய்வது மிகவும் எளிதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், த.வெ.க. தொண்டர்கள், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேராக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்.
இதை முன்னிட்டு, சென்னையில் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தயார் நிலையில் உள்ள உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே கூட்டத்தில், மதுரையில் நடைபெற உள்ள முக்கிய மாநாடு குறித்து விஜய் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை பணியை மெருகூட்டும் விதமாக, அதிக உறுப்பினர்களை த.வெ.க.வில் இணைக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர் இல்லத்திற்கே தலைவர் விஜய் சென்று அவர்களை கௌரவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.