தவெக விஜய்யின் சுற்றுப்பயணம் நாளை தொடக்கம் – லோகோ வெளியீடு

Tvk leader Vijay's tour begins tomorrow

சென்னை, செப்டம்பர் 12:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்.

அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு வருவார். விமான நிலையத்தில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் சென்று, அரை மணி நேரம் உரையாற்றுவார். பின்னர் பிரசார வாகனத்தில் இன்று மாலைக்குள் சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படுகின்றது. திருச்சி காந்தி மார்க்கெட், தஞ்சாவூர் ரோடு வழியாக பால் பண்ணையும், சிதம்பரம் பைபாஸ் வழியாக அரியலூர் மாவட்டத்துக்கு புறப்படுகிறார்.

அரியலூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மதியம் 12 மணியளவில் திறந்த வெளி வாகனத்தில் மக்களுடன் சந்தித்து உரையாற்றுவார். பின்னர் மருதையான் கோவில் வழியாக பெரம்பலூர் மாவட்ட குன்னம் பகுதிக்கு செல்லும் விஜய், பெரம்பலூர் மற்றும் குன்னம் பகுதிகளில் 21 நிபந்தனைகளோடு ஒருமணி நேரம் பிரசாரம் நடத்த காவல்துறை அனுமதி பெற்றுள்ளார். குன்னம் பஸ் நிலையத்தில் மாலை 4 மணிக்கு, மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு வானொலி திடலில் மாலை 5 மணிக்கு பிரசாரம் நடைபெறும். திருச்சியில் ஸ்ரீரங்கம், சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பிரசாரம் செய்ய வேண்டி அனுமதி கோரப்பட்டிருந்தாலும், மரக்கடை பகுதியில் ஒரே இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய்யின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு லோகோ வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுப்பயண லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் விஜய் நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. மேலும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

விஜய் வருகையை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 2 நாட்களாக மூன்று மாவட்டங்களிலும் முகாமிட்டு முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். மேலும் விஜய்யை வரவேற்று ஆங்காங்கே பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!