சென்னை ஜுலை 4:
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:- மத்திய அரசு அளவில் மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.
சுயநல அரசியல் லாபங்களுக்காக கூடி குலைந்து கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோ, திமுகவோ இல்லை. கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.
கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் அல்ல. உறுதியான தீர்மானம் எனத் தெரிவித்துள்ளார்.