மாநகராட்சி கூட்டத்தில் நுழைந்து விசில் அடித்த தவெக கவுன்சிலர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வருபவர் அல்லாபிச்சை. இவர் ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால், சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திற்கு அல்லாபிச்சை சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக வருகை தந்தார். கூட்ட அரங்கிற்குள் நுழைந்தபோது, திடீரென விசில் அடித்தார். இதையடுத்து, மாமன்றக் கூட்ட அரங்கிற்குள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்து, அல்லாபிச்சையுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மேயர் ராமகிருஷ்ணன் தலையிட்டு, மாமன்றத்திற்குள் விசில் அடிக்கக் கூடாது என்றும், மீண்டும் அடித்தால் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மேயரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத அல்லாபிச்சை, மீண்டும் விசில் அடித்துள்ளார்.

இதையடுத்து, மாமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்ட கவுன்சிலர் அல்லாபிச்சை, அடுத்து வரவிருக்கும் இரண்டு மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதாக மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

Related Post

Latest News