வாஷிங்டன், அக்டோபர் 22:
தீபங்களின் பண்டிகையான தீபாவளியை இந்தியாவுடன் இணைந்து உலகம் முழுவதிலுமுள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், அமெரிக்காவிலும் இந்திய சமூகத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடினர்.
இந்த மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இந்திய அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் தீபாவளியை கொண்டாடினார்.
தமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கை ஏற்றி, டிரம்ப் தீபாவளி விழாவைத் தொடங்கினார். நிகழ்வின் போது வெள்ளை மாளிகை இந்திய பாரம்பரிய அலங்காரங்களால் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப் கூறியதாவது, “இன்று உலகம் முழுவதும் உள்ள இந்திய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். சில மணி நேரங்களுக்கு முன்பு உங்கள் பிரதமரான நரேந்திர மோடியுடன் சிறந்த உரையாடல் நடந்தது. வர்த்தக உறவுகள் தொடர்பாக பேசினோம்; அவருக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளது.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி நிலவுவது குறித்து பேசினோம். போர் எதுவும் வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு. மோடி மிகவும் சிறந்த தலைவரும், பெரும் நண்பரும் ஆவார்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,இந்த தீபம் இருளின்மேல் ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவின் வெற்றி, தீமையின் மீது நன்மையின் வெற்றி எனும் நித்தியமான உண்மையை நினைவுபடுத்துகிறது. உலக மக்கள் எல்லோரிடமும் இதே ஒளி பரவட்டும் என்று வாழ்த்தினார்.