சென்னை, அக்டோபர் 13:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஆலோசனை மற்றும் எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என தீர்மானிக்க சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் அப்பாவு கூறியதன்படி, சட்டசபை கூட்டம் நாளை துவங்கியதும், சமீபத்தில் கரூர் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டு, நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
அதன்பிறகு, 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெறும். இந்த 3 நாட்களில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் துவங்கி, முதலில் கேள்வி நேரம் நடைபெறும். அதன் பின் மானியக்கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்.
கூட்டத்தின் கடைசி நாளில் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கு பதிலுரை வழங்கப்படும் என்று சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்.