சென்னை, ஆகஸ்ட் 11:
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொழில் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக முதல்வர் பலமுறை வெளிநாடுகளில் பயணம் செய்து, அங்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து தமிழகத்திற்கு வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை கொண்டு வருகிறார்.
அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, 4 தடவை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளுக்கு போய் ரூ.18,498 கோடி மதிப்பில் தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவானது.
இப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-வது முறையாக வெளிநாட்டுக்கு செல்லப் போகிறார். இது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான அரசு முறைப் பயணம் ஆகும். இந்த பயணம் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கும் அழைப்புகளை அவர் விடுக்க உள்ளார்.
மேலும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவர்களுடனும் முதலமைச்சர் உரையாற்ற உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.