சென்னை, ஆகஸ்ட் 8:
தமிழ்நாட்டிற்கான மாநில பள்ளிக் கல்விக் கொள்கை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ்நாடு அரசு, சிறப்பு மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் அறிவிப்பின் படி, ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் குழு 2022ல் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பல்கலை. துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்து கேட்டு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.650 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. வெள்ளப் பாதிப்பு, மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக வெளியீடு தாமதமானது; இறுதியில் 2024 ஜூலை 1ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
- தமிழ் மற்றும் ஆங்கிலம் கொண்ட இருமொழி கொள்கையையே தொடர வேண்டும்.
- பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாகக் கடைபிடிக்க வேண்டும்.
- 3, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூடாது.
- நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களும் தனியார் கல்வி நிறுவங்களும் விளம்பரப்படுத்துவதில் தடை விதிக்க வேண்டும்.
- கல்லூரியில் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் பாகுபாடு பெற வேண்டும்.
- இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 1% இடஒதுக்கீடு.
- ‘ஸ்போக்கன் தமிழ்’ முக்கியத்துவம், அங்கன்வாடிகளுக்கு ‘தாய்-குழந்தை பராமரிப்பு மையம்’ என்ற பெயரிடப்படும். 8. கிராமப்புற, பழங்குடியினர் பகுதிகளுக்கு அதிக விளையாட்டு, பயிற்சிகள், வசதிகள் வழங்கும் திட்டம்.
- போதைப்பொருள் எதிர்ப்பு*, மனநல ஆலோசனைக் குழு அமைப்பது.
அறிக்கையில், பள்ளிக் கல்வி, உயர் கல்வி என்று இரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதற்கட்டமாக பள்ளிக் கல்விக்கான அம்சங்களை அரசு இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு முதன்மைச் செயலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.