திருப்பூர், ஜூலை 4:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ரிதன்யா என்ற இளம்பெண், வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியையையும் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கைகாட்டி புதூர் பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை என்பவரின் மகளான ரிதன்யாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான முதல் நாளிலிருந்தே கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சணை கோரி தொடர்ந்து கொடுமை செய்து வந்தால், ரிதன்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்திற்காக வைத்திருந்த பூச்சிமருந்தினை உட்கொண்டு தற்கொலை செய்தார்.
இதையடுத்து, போலீசார் கவின் குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் , தற்போது மாமியார் சித்ராதேவியையையும் கைது செய்துள்ளனர். மேலும் ரிதன்யாவின் கணவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வரும் ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.