சென்னை, ஜூலை 12:
தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது தற்கொலை போலவே இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை புழல் பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்த நவீன் பொலின்மேனி, ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் ஒரு பிரபல பால் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். ரூ.40 கோடி கையாடல் செய்ததாக அவரது மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த போது, நவீன் தனது வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று சென்னை காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் தனியார் பால் நிறுவன மேலாளரான நவீன் மரணம் தற்கொலை போன்றுதான் உள்ளது. அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிகிறது என கூறினார். அதாவது, சிலர், தூக்கிட்டுக்கொல்லும்போது சிலர் காப்பாற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அது பல இடங்களில் நிகழ்ந்துள்ளது என்று அருண் கூறினார்.
மேலும், மேலாளர் நவீனை மாதவரம் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன், அலுவலகம் அழைத்துவந்து விசாரித்ததாக இதுவரை தகவல் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
நவீன் மரணம் நிகழ்ந்த அன்று, பாண்டியராஜனும் விடுப்பில் சென்றது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, காவல் துணை ஆணையருக்கு விடுமுறை அளித்தது நான்தான் என்றும் அருண் கூறியிருக்கிறார்.
மேலும், நவீன் அனுப்பிய மின்னஞ்சலில், காவல்துறை மிரட்டியதாக எங்குமே குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.