திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Tiruchendur Soorasamharam – Special buses across TN

தூத்துக்குடி, அக்டோபர் 24:

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியஸ்வாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா உலகப் புகழ் பெற்றது. வருடம் தோறும் நடைபெறும் இந்த விழாவில், சூரபத்மன் அசுரனை அழிக்கும் நிகழ்வான சூரசம்ஹாரம் முக்கிய இடம் பெறுகிறது.

சூரசம்ஹாரம் நிகழ்வை காண தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது, வடஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கு பெருவாரியான பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வருவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 26-ஆம் தேதி, சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும், அக்டோபர் 27-ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்பிச் செல்லும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது “பக்தர்களின் அதிக வருகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள், ஓய்விடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவின் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்,” என தெரிவித்தனர்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை